Tuesday, July 10, 2018

வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்பம்

வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்பம்

எலிக்கட்டுப்பாடு

எங்கெல்லாம் ஆட்டுக்கிடை அமர்த்துகிறோமோ, அந்த வயலில் எலி வாழாது.நொச்சி மற்றும் எருக்கலை செடியை வயல் சுற்றி வேலிப்பயிராக நட்டால், எலித் தொல்லை வராது.தங்கரளி கிளைகளை வயல்சுற்றி போட்டால் எலி வராது.நெல் வயலில் எலியைக் கட்டுப்படுத்த ‘சணப்பு’ பூவை சிறிய துண்டுகளாக்கி, அதைப் பரவலாக அங்கு அங்கே வயலில் இட்டால், அதிலிருந்து கிளம்பு வாடையினால் எலிகள் ஓடி விடும்.பனை ஓலைகளை அருகில் ஆந்தை உட்கார குச்சியில் கட்டி வைத்தால் அதிலிருந்து கிளம்பும் ஓசையினால் ‘எலிகள்’ ஓடிவிடும்.எலி வலைக்கு அருகில் ஆந்தை உட்கார குச்சி வைத்தால் அது எலித் தொல்லையை குறைக்க உதவும்.எலி எண்ணிக்கையை குறைக்க ஒவ்வொரு பயிர் அறுவடைக்குப்பின்பு, எலி வலைத்தோண்டி எலிகளை அழிக்கவேண்டும்.எலிகளைக் கட்டுப்படுத்த, மூங்கில் கழிகளின் மீது வயர் சுற்றி பிடிக்க ஒரு பொறி செய்து பயன்படுத்தலாம்.எலியை அழிக்க, ஒரு பெரிய வட்ட வடிவமான மண் பானையை வயலில் தரைமட்டத்திற்கு புதைக்கவேண்டும். அதில் பாதியளவு களிமண் சாந்தை நிரப்பிவிடவேண்டும். ஒரு தேங்காய் தொட்டியில் எலி உணவு வைத்து அதைப் பானையின் உள்ளே வைத்தால், எலியை கவரும், கவரப்பட்ட எலியானது மண் சாந்தில் விழுந்து மேல் எழ முடியாமல் இறந்துவிடும்.ஊறவைத்த அரிசியை எலி கவரும் பொறியாக வைத்தால், நிறைய எலிகளைக் கவரும்.பசும் சாணத்தை வயலிலும், வரப்பிலும் வைத்தால், எலித்தொல்லைக் குறையும்.

பறவை விரட்டுதல்

கவன் கல் எறிந்து பறவையை விரட்டலாம்.கவட்டை வைத்து கல் எறிந்து பறவையை விரட்டலாம்.வயலின் நடுவில் இறந்த காக்கையின் உடலை நீண்ட குச்சியில் கட்டி வைத்தல்.கறுப்புத்துணியை நீண்ட குச்சியில் இட்டு, வயலின் நடுவே வைத்தால் காக்கையை விரட்டும்.தேவைப்படாத கேசட்லிருந்து, ‘டேப்’ சுருளை எடுத்து, வயலில் குறுக்கும் நெடுக்குமாக கட்டினால், பறவைகள் ஏதோ ஒரு வலை என்று நினைத்து ஓடிவிடும்.

தண்ணீர் இருப்பை அறிதல்

ஆலமரம் இருந்தால், நிலத்தடி நீர் அதிகமாக இருக்கும்.வேப்பமரத்தில் முடிச்சுகள் அதிகமாக காணப்பட்டால் அங்கு நிலத்தடி நீர் அதிகமாக இருக்கும்.எங்கு கரையான் புற்று உள்ளதோ, அந்த இடத்தில் நிலத்தடி நீர் அதிகமாக இருக்கும்.விவசாயிகள், வேப்பக்குச்சி, உலோகம் போன்றவற்றை வைத்து பழைய முறைப்படி நீர் உள்ளதை அறிந்து, அங்கு கிணறு தோண்டுவார்கள். அத்தகைய குச்சியை கையில் வைத்து நடக்கும்போது, குச்சியானது தானாக சுழல ஆரம்பிக்கும் அதை வைத்து அந்தக் குறிப்பிட்ட இடத்தில் அதிகமான அளவு நிலத்தடி நீர் உள்ளதை அறியலாம்.சில விவசாயிகள் காந்தக்கல்லை வைத்து நீர் உள்ளதை அறிய பயன்படுத்துவார்கள். காந்த துண்டை ஒரு👌 நூலில் வைத்து கட்டிக் (அதை பெண்டுலம் போல்) கொண்டு, வயலில் நடந்தால் அந்தக் காந்தமானது தானாகவே அந்த இடத்தில் சுற்ற ஆரம்பிக்குதோ, அந்த இடத்தில் நிலத்தடி நீர் அதிகமாக உள்ளது என அறிந்து அவ்விடத்தில் கிணறு தோண்டுவார்கள்.

மழை வருவதை அறிதல்

மழைப் பறவையானது தரைமட்டத்தில் முட்டையிட்டால் குறைந்த மழை வரும். அதுவே மிகுந்த உயரத்தில் எனில் அதிக மழை வரும். முட்டையின் கூர்முனை நிலத்தை நோக்கி இருந்தால் அது பருவம் முழுவதும் மழை வருவதற்கான அறிகுறி.ஆலமரத்தின் விழுதுகள் முளைக்க ஆரம்பித்தால், 2-4 நாட்களில் மழை வரும் என்று உள்ளூர் மக்கள் சொல்வார்கள்.ஆமணக்கு மற்றும் இலந்தை பழம் மரத்தில் மொட்டுகள் முளைக்க ஆரம்பித்தால் 10-15 நாட்களுக்குள் மழை வரும்.கருவேல மரம் பூக்க ஆரம்பித்தால் 10-15 நாட்கள் கழித்து மழை வரும்.வேப்பம்பழம் பழுத்து கீழே விழ தொடங்கினால் 10-15 நாட்கள் கழித்து மழை வருவதை எதிர்பார்க்கலாம்.ஊசி தட்டான் தரைத்தளத்தில் பறந்தாலும், தவளை சத்தத்தினாலும் எறும்பு வரிசையாக ஊர்ந்து போனாலும் மழை வரும்.காற்று வரும் திசை / மேக மூட்டத்தின் திசை வைத்து விவசாயிகள் மழை வருவதே முன்னரே அறிவார்கள். மேற்கு காற்று / மேகமூட்டம் இருந்தால் நல்ல மழையும், வடமேற்கு மூலையில் மேகமூட்டம் இருப்பின் அது புயல் காற்றை கொடுக்கும் என்பார்கள்